ஐ பி சி - 354 - பாகம் - ஒன்று

இருக்கும் தெம்பை வைத்து ஒரு அரை விட்டான் முகிலன். வாயின் ஓரம் வழிந்து வரும் குருதியை தடவிப்பார்த்தபடியே ,  முகிலனை முறைத்தான், அடிவாங்கிய சுப்பு. 

மறுபடியும் ஒரு அரை. 

இந்த முறை காதின் அருகில் விழுந்தது.  அதிலும் குருதி வந்திருக்குமா  என்று யோசித்தான் சுப்பு. மறுபடியும்  முறைத்தால் எந்த பக்கம் அடி விழும் என்ற அரை நொடி யோசனையை புறம் தள்ளினான் . அடி வாங்குவது சுப்புவிற்கு புதிதல்ல. ஆனாலும் இவனெல்லாம்  அடிக்கிறானே என்பது வலித்தது . ஆனாலும் காரியம் தான் முக்கியம் என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான். 

இதுவரை மூன்று அரை வாங்கியிருந்தான் சுப்பு. கன்னத்தை தடவியபடியே அடுத்து என்ன, என்று யோசித்தான் . ஒன்று வன்கொடுமை சட்டத்தில் இவனை உள்ளே தள்ள வேண்டும் . இல்லையேல் முகிலன் கோபம் தலைக்கேறி இவனை கொல்ல வேண்டும் . இதை தாண்டி யாரேனும் மன்னித்து வீட்டுக்கு கூட அனுப்பலாம் . தப்பி தவறி கூட அப்படி ஒன்று நிகழ்ந்து விட கூடாது என்று உறுதி பூண்டான்.

இந்த சிந்தனைகளை இடைமரித்தது முகிலனின் செல்போன் சிணுங்கல். இவனது மனைவி சரிகாவாக தான் இருக்க வேண்டும் .  அவளேதான், அரை நொடி காதில் பேசிவிட்டு,  மீதியை ஸ்பீக்கரில் போட்டான் முகிலன் . 

"அவன ரெண்டு தட்டு தட்டிட்டு வீட்டுக்கு அனுப்பி வச்சுடுநே" என்று சரிகா அவனது அண்ணனிடம் சொல்ல , வெறும் உம் என்று முடித்தான் . 

செல்போனை அனைத்து "நீ என்ன பெரிய ரவுடியாடா" என்று கேனைதனமான கேள்வி ஒன்றை வீசினான் முகிலன். அதோடு ஒரு அரை விட்டான் . காதில் ரீங்காரம் அடிக்க ஆரமபித்தது. 

அடித்த முகிலனுக்கே தெரியும் சுப்பு ஒரு டம்மி பீஸ் என்பது . இருந்தாலும் அவனுக்கு தங்கை என்றால் உயிர்.அவளை அடித்தவன் மாப்பிள்ளையாக இருந்தால் என்னஎந்த மயிராக இருந்தால் என்னவந்த கோபத்திற்கு இன்னொரு குத்து விட்டான் . 

குத்து வாங்கிய சுப்புவிர்க்கும்  இந்த அண்ணன் தங்கை பாசம் தெரியும்.  இருந்தாலும் அடக்க முடியாமலேயே சரிகா கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டிருந்தான். சரிகா கன்னத்தை பிடித்தபடியே அவளது அறைக்கு ஓடினாள் . அங்கிருந்தே அண்ணனுக்கு தகவல் அனுப்பினாள். கால் மணிநேரத்தில் காக்கி ஆடையுடன் வந்தான் முகிலன் . சுப்புவின் சட்டையை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தான் . அரை மணிநேரமாக வெளுத்துக்கொண்டிருந்தான். 

இன்ஸ்பெக்டர் வந்து முகிலனை தனியாக அழைத்து என்னவென்று விசாரித்தார். அடடா இந்த ஆள் பாட்டுக்கு சமாதானம் பேசி விட்டுக்கு அனுப்பி விடுவாரோ என்று சுப்பு பயந்தான் . அவர் காதுபடவே "ஆமாம் இவரு பெரிய வென்ன , அப்படியே கிழிச்சுருவ பாரு" என்று நக்கலாக சிரித்தான் . அவர் லத்தியை கொண்டு அடித்த  அடியில் , கால் மரத்து போனது. பரவாயில்லை , விட்டிற்கு போவதற்கு இதுவே மேல் என்று சுப்பு முடிவு செய்தான் .

திடீரென வந்த முகிலன் , சுப்புவை எழுப்பி , வா போகலாம் என்றான். தான் இவ்வளவு நேரம் செய்தது எதுவுமே வேளை செய்யவில்லையா என கொதித்தான். அந்த காவல் நிலையத்தின் அறையிலிருந்து சுப்புவை கை தாங்களாக வெளியே கூட்டி வந்தான் முகிலன். சுப்பு சட்டென்று ஒரு முடிவு எடுத்தான் . வாயில் இருந்த இரத்தம் , எச்சை அனைத்தையும் சேகரித்து , இன்ஸ்பெக்டரின் முகத்தில் துப்பினான் . அவரின் தாயை பற்றி இரு வார்த்தைகளையும் சேர்த்து துப்பினான் . அது வேலை செய்தது.  கோபம் கொப்பளிக்க அவர் எழுந்தார். காவல் நிலையம் பரபரப்பானது . வெளுத்து எடுத்து விட்டார்கள் . "சார் என் மச்சான் சார்" என்று முகிலன் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. ஒரு வாரம் வைத்து ஊமை குத்து குத்தி நீதி மன்றத்தில் சமர்பித்தார்கள். 

ஐ பி சி - 354 என்ற பிரிவின் கீழ் மனைவியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்புவின் அப்பாவியான முகம் பார்த்து, நீதிபதி கரிசனமுற்றார். "பார்த்தா , நல்ல படிச்சுருக்க; நல்ல வேலைல இருக்க, அப்புறம் ஏன் பா பொண்டாட்டிய  அடிச்ச " என்று கேட்டார். 

தன சோக கதையை ஆரம்பித்தான் சுப்பு....





தமிழனுக்கு இந்தி தேவையா - பாகம் இரண்டு

பாகம் ஒன்று - link


வீட்டிலேயே உட்கார்ந்து , வடகறி  ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஹிந்தி தேவையாம் .  சோமாடோகாரன் ஒருவன் இப்படி சொல்ல பற்றிக்கொண்டது நெருப்பு . எனக்கு ஒரே கேள்வி தான். பான் இந்தியா தொழில் செய்யும் ஒரு வியாபாரி, அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அல்லவா வைத்திருக்க வேண்டும் ? இன்போசிஸ் தொடங்கி அனைத்து ஐ டி கம்பெனிகளில் ஆங்கிலமே பொது மொழி. இதிலும் நாங்கள் இந்தியில் தான் பேசுவோம் என்று தர்க்க டார்ச்சர் செய்யும் பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 


Everyone should know Hindi': Zomato executive's remark to customer triggers  language debate online | Trending News,The Indian Express

சரி , யாரோ ஒருவர், ஹிந்தி தேசிய மொழி, அது கூட தெரியாதா என்று கேட்டுவிட்டார். இது இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று சோமாடோ சி ஈ ஓ கதறி இருக்கிறார் . 

ஆம் இது ஒரு பெரிய பிரச்சனை தான். 

உதாரணத்திற்கு நாம் ரங்கநாதன் தெருவுக்கு எதோ ஒன்று வாங்க செல்கிறோம். நம்மை வரவேற்கும் கடைக்காரர்  "நமஸ்தே , ஆப் கோ கியா சாஹியே "  என்று சொன்னால் என்ன நினைப்போம் ? 

நாம், சென்னையில் இருக்கிறோமா , இல்லை வட மாநிலத்தில் இருக்கிறோமா என்ற எண்ணம் வருமா வராதா? 

சரி, கடைக்கு வந்தாச்சு, அடுத்து என்ன செய்ய முடியும்? 
 
ஒன்று, அவரிடம், எனக்கு ஹிந்தி தெரியாது, தமிழில் கேளுங்க என்று சொல்லலாம். ஆனால் கடைக்காரருக்கு தமிழ் தெரியவில்லையென்றால் நாம் சொல்வதே புரியாது . 

"கென் யு ப்ளீஸ் அஸ்க் தட் இன் இங்கிலிஷ்" என்று ஆங்கிலத்தில் கேட்கலாம், கடைக்காரருக்கு ஆங்கிலமும் தகிடு தத்தோம் என்றால் பதில் வராது . 

அடுத்து, இதுவரை நாம் பார்த்த ஹிந்தி படங்களை வைத்தும் , பானி பூரி பையனிடம், "பையா" இன்னொரு பூரி ஓசியில் கொடு என்று கேட்டிருக்கும் அனுபவத்தை வைத்தும், அவரிடம் பேசி பார்க்கலாம். 

இதுவும் ஒத்துவரவில்லை என்றால் கடைசியாக, சைகை காட்டி , ஆதிவாசி போல ஷாப்பிங் பண்ணலாம்.

இது அதீத கற்பனையாக தற்பொழுது தெரியலாம். ஆனால் பத்து வருடங்களில் இது நடக்காது என்று சொல்ல முடியுமா? ஏற்கனவே ஹோட்டலில், சாம்பார் கேட்டால் சட்னி வைக்கிறார்கள். சென்னையில் கட்டும்   பெரிய  கட்டிடங்களை எல்லாம் வடமாநில தொழிலாளர்களே கட்டுகிறார்கள்.  அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி ஹிந்தி. இப்பொழுது தெரிகிறதா, தமிழர்கள் ஏன் தேசிய மொழியே அல்லாத ஹிந்தியை கற்க வேண்டும் என்று? அவர்கள் வசதியாக வந்து , அவர்களுக்கு சவுகரியப்பட்ட மொழியிலேயே பேசி, மகிழ , நாம் ஹிந்தி கற்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? 

வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தால் , தமிழ் கற்று, தமிழில் தான் வியாபாரம் செய்ய  வேண்டும். அதேபோல், நாம் வட மாநிலம் சென்று தோசை கடை போட்டாலும், இந்தியில் தான் பேச வேண்டும். அங்கிருப்பவர்களிடம் தமிழில் "இன்னும் சாம்பார் ஊத்தவா" என்றால், அவன் நம் பரம்பரையை இழுத்து திட்டுவான். மொத்தமாக , யாருக்கு எங்கே, என்ன மொழி "தேவையோ" அதை கற்க வேண்டும்.  ஆக , தேவையே மொழியை நிர்ணயம் செய்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? தமிழர்கள்  வட இந்தியா சென்றால்  நாம் ஹிந்தி கற்க வேண்டும் , அவர்கள் இங்கே வந்தாலும் , நாமே ஹிந்தி கற்க வேண்டும் என்று நினைப்பது பாசிசமா இல்லையா? 




இது தான் இங்கே பிரச்சனை. 

தாத்தாவின் வெற்றிலை பெட்டி

"தாத்தா வாயில கொஞ்சம் பால ஊத்து சாமி " என்று அஞ்சம்மா கிழவி  அவனை கொஞ்சி அழைத்தாள். தாத்தாவின் முறுக்கு மீசை மீது படாமல் , நாலு சொட்டு பால் ஊற்றினான்  குமார் . அவனுக்கு வயது ஒன்பது.  இது வரை ஆறு நாள் பால் ஊற்றியும் உயிரை விடாமல் பிடித்து வைத்திருந்தார் அவனது தாத்தா.  அப்படியே வெளியே வந்து ஒரு பெட்டியை  தேட ஆரம்பித்தான். 



அவன் தேடுவது  ஒன்றும் சாதாரண பெட்டி அல்ல. தாத்தாவின் ரகசியங்களை அடக்கிய வெற்றிலை பெட்டி. அதற்குள் என்ன இருக்கும் என்பது அவரை தவிர யாருக்கும் தெரியாது . தாத்தாவின் நண்பர்கள் பலர் அலுமினிய பெட்டி வைத்திருக்க, இவர் மட்டும் கம்பீரமாக தேக்கு பெட்டியுடன் வலம் வருவார்  . அந்த ஊரிலேயே அப்படிப்பட்ட மரப்பெட்டி வைத்திருந்தது தாத்தா மட்டும் தான் என்று பாட்டி அடிக்கடி கூறுவாள்.   

இதையெல்லாம் தாண்டி  அந்த பெட்டிக்கு அப்பாவை விட வயது ஜாஸ்தி என்ற தகவல்  குமாருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி இருந்தது  . 


தாத்தாவிற்காக எவ்வளவோ முறை செட்டியார் கடைக்கு ஓடி , வெற்றிலை , பாக்கு வாங்கி வந்திருக்கிறான் . பல முறை இனாமாக ஐந்து  பைசா மிட்டாய் கூட கிடைத்திருக்கிறது.  சில சமயம் அதீத ஆர்வத்தில் சீவள் ,  சுண்ணாம்பை சுவைத்து நாக்கில் பட்டுக்கொண்டதும் உண்டு  .  வழக்கமான இத்யாதிகளை தாண்டி  , அந்த பெட்டியில் என்ன தான் வைத்திருக்கிறார்  என்று பார்க்க குமாருக்கு ஆசை .  எத்தனை முறை  கேட்டாலும் அந்த பெட்டியை தொடவே விட மாட்டார் . 


கடை வீதிக்கு போகும் பொழுது கூட ஒரு கையில் அவனையும் , மறு கையில் பெட்டியையும் பிடித்த படியே வலம் வருவார். ஒரு முறை வேட்டியை இறுக்கிக் கட்டும்போது இவனிடம் பெட்டியை கொடுத்தார் .  திறந்து பார்க்கும் முன்னரே வாங்கிக்கொண்டார் . இதையெல்லாம் மனதில் அசை போட்டபடியே அந்த பெட்டியை தேட ஆரம்பித்தான். 


வாசலில் அப்பா கயிற்று கட்டிலில் சித்தப்பாவுடன் இருந்தார், பெட்டி இல்லை. அடுத்து , ரயில் பெட்டி போல நீளமாக இருந்த அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக தேடினான் . ரேழியில் தேடி பார்த்து சோர்ந்து போனான் . அங்கிருந்தே பார்வையால் தேடினான்  . 


அப்பொழுது அங்கே இருந்த குதிரின் கீழே அந்த  பெட்டியை பார்த்தான் . படபடப்பு  அதிகமானது . விருட்டென எழுந்து , ஓடி அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு கொல்லைக்கு ஓடினான் . கிணற்றின் பின்னால் அமர்ந்து யாரும் இருக்கிறார்களா என்று ஒரு நிமிடம் நோட்டம் விட்டான்.  சுற்றும் முற்றும் பார்த்தபடியே லேசாக திறந்தான் . குப்பென்று  புகையிலை நாற்றம் அடித்தது . 


அதே நேரம் "அய்யய்யோ" என்ற சத்தம் கேட்டு திகைத்தான்  . பெட்டியை மூடி,  சத்தம் வந்த இடத்தை  நோக்கி ஓடினான் .


அங்கே தாத்தா  வாய் பிளந்தபடி கிடந்தார். அவனை அறியாமல் கண்களில் நீர் நிரம்பியது. பெட்டியை அவர் அருகில் வைத்து விட்டு வெளியே ஓடினான்  .


அந்த பெட்டியை தாத்தாவின் அருகிலேயே வைத்து கொள்ளி வைத்தார்கள்  .  


கடைசி வரை குமாருக்கு அந்த பெட்டிக்குள் என்ன இருந்தது என தெரியவில்லை. 


அந்த பெட்டியில் தாத்தாவின் உயிர் இருந்ததாகவே அவன் நம்பினான் .

புக்பெட் - பாரா வகுப்பு

எல்லோராலும் கதை எழுத முடியும். எல்லோராலும் சிறப்பாக எழுத முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையை பாராவின் Bukpet-writeRoom வகுப்பு தந்திருக்கிறது.

May be an image of 2 people and text

எது கதை ஆகிறது, எப்பொழுது நல்ல கதை ஆகிறது, எப்படி காலம் கடந்து நிற்கிறது, அதற்கான கட்டமைப்பு என்ன என்பதைச் சொல்லித் தர ஆள் இல்லை. இதை ஒரு புத்தகம் மூலமாகவோ, யூ டியூப்பில் பார்த்தாலோ இந்த அளவிற்கு மனத்தில் பதிந்திருக்குமா என்றால், நிச்சயம் இல்லை. 

எது போன்ற சம்பவங்கள்  கதை ஆகின்றன, காலம் கடந்து நிற்கின்றன என்பதற்கான பாராவின் உதாரணங்கள் உண்மையாகவே என்னை பிரமிக்க வைத்தன. எத்தனைக் கதைகள், எத்தனை மேற்கோள்கள்! கதையில் அடுக்குகள் (Layers) என்றால் என்ன, அதை அடுக்குவது-வடிவமைப்பது எப்படி என்பது  போன்ற மைக்ரோ அம்சங்களையும் புட்டுப் புட்டு வைத்து விட்டார்.  

மிக மிக முக்கியமான விஷயம். ஆள் கிடைத்து விட்டார்கள், அவர்களை வைத்து ஒரு கதா காலட்சேபம் பண்ணலாம் என்றில்லாமல், ஒரு கலந்தாய்வைச் செய்வது எப்படி என்று பாரா ஒரு புத்தகமே எழுதலாம். அதேபோல் கிடைத்த நேரத்தில் சொந்தப் பெருமை பேசாமல், சக எழுத்தாளர்களின் கதைகளை வைத்தே இந்த வகுப்பை நடத்தியது, பாராட்டுக்குரியது. 

ஏற்கெனவே தமிழ் படிப்போர் எண்ணிக்கை மெல்லக் குறைந்து வருகிறது. ஹிந்தி வேறு கதவைத் தட்டியபடியே நிற்கிறது. இதில் கதை எழுதினாலும் யார் படிப்பார்கள்? இந்தக் கேள்விக்கான விடை, நல்ல கதை வெல்லும் என்பதில் ஒளிந்துள்ளது. 

ஆனால் எது  நல்ல கதை? நாம் ஒரு கதை எழுதுகிறோம், நாலு பேருக்கு அனுப்புகிறோம், அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, நம் முகத்துக்காகவாவது நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடும். இதனால், நாம் எழுத்தில் கோட்டை விடுகிறோமா இல்லையா என்றே தெரியாமல் சுற்றித் திரிவோம். எழுத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த ஒரு குரு தேவை. அது இந்த வகுப்பின் மூலமாக எனக்கு நிறைவேறியது.  


அரை நொடி தாண்டி ஒரே விஷயத்தில் நிற்பதில்லை என்ற முடிவுடன் இருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்குப் பிடித்தாற்போலக் கதை இல்லை என்றால், எழுதுவதில் பயன் இல்லை. அவர்களுக்காக, இந்த வகுப்பின் மூலம் கற்ற வித்தைகளை மொத்தமாக இறக்கிக் கதை எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன்.

தமிழனுக்கு இந்தி தேவையா - பாகம் 1

 தமிழனுக்கு இந்தி தேவையா?



தமிழுக்கு நிகரான ஒரு மொழியே இல்லை என்பது தான் இன்று வரை என்னுடைய கருத்து.  அதே போல மத்த மொழிக்காரர்களுக்கும் அவர்கள் மொழியே பெரிது என்ற கருத்துக்கும்  நியாயம் உண்டு.  இந்தியாவை போல மொழிவாரியாக மாநிலங்களை கொண்ட தேசம் வேறொன்று இருக்கிறதா என்று தெரியவில்லை, ஒரு வேலை ஐரோப்பா கிட்ட வரலாம். ஆனால் அவர்களுக்கு ஒரே நாடும் கிடையாது , ஒரே மொழியும் கிடையாது, அப்படியே தேவை பட்டாலும் ஆங்கிலம் இருக்கிறது. அதுவும் , எப்போது தேவையோ அப்போது மட்டும் தான். ஜெர்மனிக்கு சென்று இனி அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடுங்கள் என்று சொன்னால் அடித்து துவைத்து விடுவார்கள். ஜப்பானியர்களும் அப்படியே, அரபு தேசத்து மக்களும் அப்படியே. சுருக்கமாக சொல்லப்போனால் பிராந்தியத்திற்கு ஒரு மொழி, உலகளாவிய தேவைக்கு ஆங்கில மொழி.

சரி அப்படியே, பாரத தேசத்திற்கு வருவோம், இங்கேயும் அதே கட்டமைப்பு தான்,. வடக்கே குஜராத்தி ,ஒடியா, பங்காளி , மராத்தி. தெற்கே வந்தால், இருக்கும்  நாலு மாநிலத்திலும் நாலு மொழிகள். அவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள ஆங்கிலம். இருக்கும் ஒரே பிரச்சனை தெற்கே ஆங்கிலம் வளர்ந்த அளவிற்கு , வடக்கே வளரவில்லை. அதோடு ஒரே மொழி , ஒரே தேசம், அத்தோடு  அதற்கு தெவசம் என்பதை  ஆளும் பாஜக சித்தாந்தமாகவே வைத்துள்ளது. உண்மையில் தமிழரான நமக்கும் (நாம் தம்பி மார்கள், பரிசோதித்து சான்றளிக்கலாம்) , மொழிவாரி  மாநிலத்தார்க்கு ஹிந்தி தேவையா? அடித்து துவைத்த விஷயம் தான் என்றாலும், காவிரி பிரச்சனை போல இதுவும் ஒரு ஸீஸனல் பிரச்சனை , அடுத்த முறை இந்த பிரச்சனை வரும் முன் இந்த பதிவை போட்டு வைக்கிறேன். 


வடக்கே ஹிந்தி பெல்ட் (அ) cow பெல்ட் என்று ஒரு சொல்லாடல் உள்ளது, எப்படி திராவிடமோ அப்படி. இதில் வரும் மாநிலங்கள் மேற்கே குஜராத்தில் இருந்து, அடுத்து மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம் ஆகியவற்றை இந்த கவ் பெல்ட்டில் அடக்கி விடலாம். இது இந்தியாவின் நாற்பது சதவீத மக்கள் தொகையை கொண்டதொரு பெல்ட், அனைவரும்  ஹிந்தி பேசும் மக்கள் (குஜராத்தில் பாதி மட்டும்  ), இதை ஒட்டி இருக்கும் பஞ்சாபி, மராத்தி, ராஜஸ்தானி மக்களும் ஹிந்தி தெரிந்தவர்களே. 


அதாவது ஹிந்தி மட்டும் தெரிந்தால் வட இந்தியாவில் நம்மாலும் இருக்க முடியும். அதோடு ஒரே நாடு , ஒரே மொழி என்பது அலுவல் ரீதியாகவும் பல வசதிகளை தரும், அரசியல் ரீதியாக இன்னும் பல வசதிகளையும் தரும். அதனால் தான், மக்கிப்போன காங்கிரஸ் முதற்கொண்டு அதை கொண்டு வர துடித்தது. இதில் தமிழர்களான நமக்கும் சில நன்மைகள் உண்டு, சந்தேகமே வேண்டாம். ஆனால் நமக்கு இது தேவையா? 

"நல்ல வேலை/நல்ல சம்பளம்" என்று ஒற்றை புள்ளியை நோக்கியே நமது பள்ளி/கல்லூரி படிப்பு நம்மை நகர்த்தும் . தமிழ் மட்டும் கம்பல்சரி சப்ஜெக்ட் ஆக இல்லை என்றால், அதை சீண்டும் தனியார் பள்ளிகள் இங்கே மிக குறைவாக தான் இருக்கும். யோசித்து பாருங்கள் , இந்த கம்பல்சன் இல்லை என்றால், தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும், மெல்ல சாகும். இப்படி தாய் மொழியான  தமிழை  படிப்பதற்கே சுணக்கம் காட்டும் நமக்கு மூன்றாவது மொழி தேவையா? அதுவும் அந்த மூன்றாவது மொழியாக இந்தி தேவையா? 


அடுத்த கேள்வி, ஹிந்தி படித்தால் என்ன நன்மை? நாம் வடக்கே செல்லும் பொழுது உதவலாம், அதை தாண்டி? ஹிந்தி படித்தால், வடக்கே வேலை தருகிறோம் என்று யாராவது சொல்கிறார்களா என்று பாருங்கள்? ஹிந்தி பேசும் மக்களான பீஹாரி, உபி மக்களே வேலை தேடி தமிழ் தேசம் வரும் பொழுது , நாம் ஹிந்தி கற்று என்ன செய்ய போகிறோம்? சுந்தர ஹிந்தியில் எக்ஸ்ட்ரா பாணி பூரி வேண்டுமானால் கேட்டு வாங்கலாம். ஹிந்திக்கு பதில் ஜெர்மன் மொழியை கற்றலாவது  வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். நமக்கு என்ன தேவை? நல்ல பாணி பூரியா இல்லை வேலையா? 


பணக்காரர்கள் மட்டும் ஹிந்தி படிக்கிறார்கள் , நமது எளிய தமிழ் பிள்ளைகள் ஹிந்தி படிக்காமல் பின் தங்கி விட மாட்டார்களா என்று அடுத்த வாதத்தை வைத்தால், அங்கிருந்து அப்படியே  கிளம்பி விடவும். இதை விட ஒரு மொக்கையான வாதமே இருக்க முடியாது. ஹிந்தி படிக்காமல் என்ன பின் தங்கி விட்டோம்? இன்னும் சொல்லப் போனால், இந்தி தெரியாமல் தானே இவ்வளவு வளர்ந்திருக்கிறோம்? தமிழ் மண்ணை விட்டு வெளியே செல்லும் தமிழன், எங்கே வேலை தேடி செல்கிறான்? வெளி நாட்டிற்கா இல்லை வட மாநிலத்திற்கா? டிமாண்ட் vs சப்ளை என்ற ஒன்றை வைத்து  தான் உலகமே  இயங்குகிறது, இப்படியிருக்க டிமாண்டே இல்லாத ஹிந்தி தேவையா?  இந்தியை விருப்ப பாடமாக யார் வேண்டுமானாலும் படிக்கலாம், யார் தடுக்க போகிறார்கள். யாருக்கு வேண்டுமோ அவர்கள் படித்துக் கொள்ளட்டும்.


இதில் இருக்கும் அரசியலை அடுத்த பார்ட்டில் பாப்போம் 

நாய் கதை

அய்யோ வலி தாங்க முடியலையே என்று மனைவி கதற, அவளை திரும்பி பார்த்தபடியே ஆட்டோவின் வேகத்தை கூட்டினான் கோபி. சதக் என்று ஒரு சத்தம்,  வண்டி அரை நொடி தடுமாறியது . நாய் கத்தும் சத்தம் கேட்டதும், தான் அவசரத்தில் அதன் மேல் வண்டியை ஏற்றி விட்டோம் என்று உணர்ந்தான் . ஒரு நிமிடம் அந்த நாயை பார்த்து விட்டு வரலாமா என்று யோசித்துவிட்டு முன்னேறினான். 

தங்கம்மா பிரசவ வலியில் பின்னால் இருக்க, இவன் எப்படி நிறுத்த முடியும். நாயை பார்த்துக் கொள்ள கூட இந்த  சமூகத்தில் ஆயிரம் பேர் இருப்பார்கள், அவளுக்கு ?. இவனை நம்பி ஓடி வந்த அவளை விடவா அந்த நாய் முக்கியம்? 

இரு நாட்கள் கழித்து தங்கம்மா, மகன் சகிதம் திரும்பி வரும் பொழுது அந்த நாயின் சிந்தனை வர , அங்கே இறங்கினான் . அடிபட்டு ஒதுங்கிய அதே குப்பை தொட்டியில், அந்த தாய் நாய் செத்து கிடந்தது. படு பாவிப்பயல்கள் ஒருவன்  கூட அந்த நாயை காப்பாற்றவில்லை. எத்தனை குட்டிகள் போட்டதோ தெரியவில்லை, ஒன்று மட்டுமே அங்கே கிடந்தது . 

அந்த குட்டியை தூக்கி வந்து மகனுக்கு ராம் என்றும் , குட்டி நாயிற்கு லட்சுமணன் என்றும் பெயர் சூட்டி வளர்த்தான். 

இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Random Posts

3/random/post-list
Blogger இயக்குவது.

Pages

search