தினமும் ஒரு வாக்கியமாவது எழுத வேண்டும் என்று முடிவெடுத்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒன்றிரண்டு நாட்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஏதோ ஒன்றை எழுதி இருக்கிறேன். ஏன் எழுத வேண்டும் , யார் படிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் தினமும் ஒரு ஸ்டேட்டஸ், இல்லை கூகிள் டாக்சில் எதோ கிறுக்கல்கள் என்று நாட்கள் எழுதியபடி ஒன்று ஆரம்பிக்கிறது, இல்லை முடிகிறது. இதனால் மற்றவருக்குப் பயன் இருக்கோ இல்லையோ எனக்கு இது ஒரு பழக்கமாக மாறி விட்டது. இது இப்போது உதவுகிறதோ இல்லையோ ரிட்டையர்மெண்ட் காலத்தில் , ஓடி ஆடி விளையாட முடியாத காலத்தில் உதவும் என்பது யூகம்.
எழுத்தும் ஒரு நாளின் பகுதி என்ற நிலைக்கு ஓரிரு ஆண்டுகளில் நான் வரக்கூடும்.
இவனென்ன தினம் ஏதோ பிதற்றுகிறான், வேலையே இல்ல போல, எதுக்கு இத்தனை வாட்சப் ஸ்டேட்டஸ் என்றெல்லாம் நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டாம். மார்க் அண்ணாச்சி block என்கிற option ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதை கிளிக்கி விட்டு என் சத்தமே வராமல் நீங்கள் உழலலாம்.
தொடர்ந்து எழுத எழுத, என் மொழி சற்றே மேன்மை அடைந்திருப்பதாக ஒரு எண்ணம். கானல் நீராகக் கூட இருக்கலாம். கோபம் கொண்ட நாட்களில், மனம் வெதும்பிய நாட்களில், கடவுளின் மேல் அத்தனை கோபத்தையும் கொட்டி சில வரிகளை எழுதி வைத்திருக்கிறேன்., இவற்றை வெளியே விடுவதில்லை. வேண்டுமானால் விண்ணப்பம் அனுப்பவும் :)
குதூகலமான நாட்களில் எழுதும் அனைத்தும், நக்கல், குறும்பு , நிறைவு எல்லாம் கொண்டதாக வந்திருக்கிறது. அவற்றை வெளியே விட்டு பல்பு வாங்குவதும் உண்டு , குறிப்பாக ரயில் பயணங்களும், அதில் நடக்கும்(+நடக்காத) சம்பவங்களும் , அதில் வரும் பெண்களும் ஆண்களும் etc etc . இந்தப் பயணங்கள் உலகையம் , அதன் பெண்களையும் வேறொரு சரடில் பார்க்க வைக்கும் அளவிற்கு இருந்தன .
இதிலிருந்து தான் ஆங்கில கட்டுரைகள் சில உதித்தன. நமக்கு தமிழே ததிங்கிணத்தோம் , இதில் இங்கிலீஷில் வேறயா என்பது போல இருந்தது அந்தக் கட்டுரைகள். அங்கிருந்து அப்படியே அடுத்த ஜம்ப் , இதுவரை தமிழில் எழுதி எனக்குப் பிடித்த, அல்லது, சிலருக்கு ஏதோ ஒரு உணர்ச்சியைத் தூண்டிய கதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவது என்ற முடிவு . எண்டே இல்லாமல் அது வேலை வாங்குகிறது.
சரி எத்தனை நாள்தான் இன்ஸ்டாவில் பார்வையாளனாக இருப்பது என்று மனதிற்கு நெருக்கமான சிலவற்றை இன்ஸ்டாகிராமில் விட, அது மூன்று லட்சம் பேரை சென்றடைந்தது இன்னும் ஆச்சரியம். இப்போது போடும் ரீலுக்கெல்லாம் லைக்குகள் வருகின்றன :|
எல்லாம் எழுத்து, எதையும் எழுதலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தெளிவையும் இது தந்தது. உதாரணமாக, இதுவரை கூட இருப்பவர்கள், பரிச்சயப் பட்டவர்கள் , சொந்தங்கள் யாரையும், எந்த ஒரு கதாபாத்திரமாக எழுதுவதில்லை என்பது ரூல் ஒன்று ஆனது. இதன் காரணமாகவே முகம் அறியாத ரயில் மாந்தர் சிலர் கதாபாத்திரங்களாக வந்திருக்கின்றனர்.
ரூல் இரண்டு - பிரேக் தி ரூல்ஸ் :) - பெண்களைப் பற்றிய அபிப்ராயங்களை இரண்டுக்கு ஒரு முறை யோசித்தே வெளியிடுகிறேன் - இது மணமான எழுத்தாளன் கொண்ட சாபம் என்றாலும், கொஞ்சமேனும் கோட்டைத் தாண்டி எழுத முடிகிறது, உதாரணம் - கீழே கொடுக்கப்பட்டுள்ள கவிதை ?!!!?
அத்தனை ஆண் தடியர்களுக்கு
நடுவில் புதைந்து கிடக்கும்
அந்த பிளான்ட் பெண்ணின்
முகத்தைப் பார்ப்பதற்குள்
முழு ரயில் பயணமும்
முடிந்து விடுகிறது
கொஞ்சம் தள்ளி நின்னு தான் போன நோண்டுங்களேன் டா..ப்ச்
…
இது எதோ ரோட்டோரத்தில் பல் இளித்து சைட் அடிக்கும் தொனியில் எழுதி இருந்தாலும் (கடைசி வரியை எடுத்து விட்டு, ஒரு மணமாகாத ஆணின் பார்வையில் பார்த்தால் , அர்த்தம் சற்றே மாறுபடும்) . இது முற்றிலும் கற்பனை, ஒரு மெய் ஞானத்தின் தேடல் ! இது கற்பனையா, இல்லை உனக்கு நடந்தா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே! இதே தொனியில் நிறைய எழுதுகிறோமோ , மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிலவற்றை எழுதுவதே இல்லை.
இது எனக்கு மட்டுமில்லாமல், ஆண் குலத்திற்கு மட்டுமில்லாமல் , பெண் குலத்திற்கும் ஒரு சோகம் தான்., இலக்கியம் தெரிந்த ஒரு பிளான்ட் பெண்ணிடம் அந்த கவிதையை? காட்டி இருந்தால் ஒருவேளை அவளே அதை ரசிக்கக்கூடும். என்ன எழுதத் தான் ஆள் இல்லை.
எந்தப் பெண் மற்றொரு பெண்ணை பல்வேறு கோணங்களில் பார்த்து எழுதுகிறாள்?
0 கருத்துகள்