மூன்று பேர் - ஒரு காதல்

 “நோன்பு நேரத்தில திட்ட மாட்டா , கொடுத்துடு” - இர்ஷாத் நம்பிக்கையூட்ட, என் முதல் காதல் கடிதத்தை எழுதினேன். 


“ஆயீசா, நீ ஒரு பேரழகி , என்னைவிட மூன்று வயது அதிகமாக இருக்கலாம் , ஆனால் என் அன்பு அளவற்றது. ஐ லவ் யூ” 


கடிதத்தை இர்ஷாத்திடம் கொடுத்தேன்.  பிழைகளைத் திருத்தினான். “பென்சில்ல எழுதிருக்கலாம்ல” என்றான். 


ஒன்றும் புரியாமல் முழித்தேன். அவன் தலையில் அடித்துக் கொண்டான் . 


கெமிஸ்டரி லாப் . அவள் பிப்பட்டில் ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் , கடிதத்தை அவளிடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தேன். 


அடுத்த நாள் பள்ளியில் நுழையும் போதே , இர்ஷாத் வராதே என்று கையசைத்தான். என்ன சொல்ல வருகிறான் என்று அருகில் சென்ற எனக்கு கன்னம் சிவக்க இரண்டு அரை விழுந்தது . அடித்தவன் யாஹ்யா, அவளின் அண்ணன். 


“உன்னைவிட பெரிய பொண்ணுக்கு லவ் லெட்டரா” என்று கடிதத்தை முகத்தில் அறைந்து சென்றான். 


அவன் சென்றுவிட்டதை உறுதி செய்த பிறகு இர்ஷாத் வந்தான். 


“விடு , என்னையும் இப்படித்தான் அடிச்சான்” 



***

“ஏண்டா நீ அடி வாங்கினத சொல்லல?" , யாஹ்யா விட்ட அறையின் ரீங்காரம் காதில் நீங்காமல் கேட்டது. 

 “அதுவா, நீ சொன்னா எங்க கேக்கப் போற, அதான்” என்றான் இர்ஷாத், சிரிப்பை அடக்கியபடி. 

“எல்லாம் சரி . எதுக்கு பென்சில்ல எழுதச் சொன்ன?”

“அதுவா, ஆயிசாவோட தங்கச்சி, ஃபாத்திமா நம்ம கிளாஸ் தான் . பிரச்சனைன்னு தெரிஞ்சா அவகிட்ட சொல்லி உன் பேர அழிக்கச் சொல்லியிருப்பேன்” என்றான். 

ஃபாத்திமா. என்னருகில் கானல் நீராக இருந்திருக்கிறாள். அக்காவைப் போலில்லாமல், , மாநிறத்தில் ஜொலித்தாள். இவளை விட்டு, அக்காவை பார்த்துவிட்டோமே என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.

கிரேக்கத்து ராணிக்கான உடலமைப்பு. குடைமிளகாய் மூக்கு. திரண்ட தோள்கள். என்னளவில் உயரம். அக்காவை விடப் பேரழகி. பழம் மரத்தின் அருகில் தானே விழும்! 

என் அடுத்த காதல் கடிதத்தை எழுதி முடித்தேன். பென்சிலில். பேர் கூடப் போடவில்லை.

அடுத்த நாள் ஃபாத்திமா பள்ளிக்கு வரவில்லை, 

இர்ஷாத் கன்னம் சிவக்க என்னைத் தேடி வந்தான் . 


***


இர்ஷாத் கோபமாக இருந்தான். நான் கன்னங்களில் கை வைத்தபடி , யாஹ்யா இருக்கிறானா என்று பார்த்தபடி நுழைந்தேன்.

“எவனோ ஒருத்தன் ஃபாத்திமாவுக்கு லவ் லெட்டர் கொடுத்துருக்கான் , எங்க வீட்ல என்ன பொளந்துட்டாங்கடா” என்றான் இர்ஷாத். அவன் கன்னத்திலும் அதே கோடுகள்.


நான் தான் அந்தக் கள்ளக் காதலன் என்று சொன்னேன்.


“அப்ப ஒருவழியா பென்சில எடுத்துட்ட” என்றான் .


எனக்கு ஃபாத்திமா என்ன முடிவெடுத்தாள் என்று தெரியாமல் பித்தம் தலைக்கேறியது. அவள் ஸ்கூலுக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. மெதுவாக இர்ஷாத்திடம் கேட்டேன் .


“அவ அதுக்கு பதில் சொல்லல , ஆனா” என்று இழுத்தான்.


“ஏண்டா இழுக்குற” , “அவங்க அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சா”! எனக்கு அடிவயிற்றில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.


“இல்ல , பக்கத்து கிளாஸ் சந்திரா இருக்கால்ல”


“ஆமாம் , அதுக்கென்ன”


“அவளுக்கு உன்ன பிடிக்குமாம், அப்புறம் எப்படினு ஃபாத்திமா கேட்டா”.


ஒரு மென் புன்னைகையுடன் , எழுத ஆரம்பித்தேன் .


“சந்திரா, நீ ஒரு பேரழகி…!”







Views So far!