“டேய்ய்ய்ய் “ - வினுவின் குரல் அண்டார்டிகாவின் மத்தியில் இருந்த ஸ்னோ ரூமின் நாற்றிசையிலும் எதிரொலித்தது .
“பாத்ரூம நான் கிளாக் பண்ணல டா ” மூன்றடுக்குப் போர்வையை விலக்கியபடி, அரைத் தூக்கத்தில் உண்மையைக் கக்கினான் முருகன்.
“கருமாந்திரம் , அதில்லடா - கொசுவக் காணோம்”. மைனஸ் பதினேழு டிகிரியில் புது கொசுக்கு எங்கே செல்வது என்ற கவலை அவன் குரலில் தெரிந்தது.
“கன்டைனரில் நல்லாப் பாரு, தூங்கப் போயிருக்கலாம்” முருகன் கனவில் பாதி நினைவில் மீதி எனப் பதில் தந்தான் . அவன் மறுபடி உறங்க முற்பட, தலையணையைத் தூக்கி அடித்தான் வினு. துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பிவிட்ட மான் போலத் துள்ளி எழுந்தான் முருகன் . நெஞ்சைத் தொட்டுப் பார்த்து விட்டு , அப்பாடா என்றான் .
ஊருக்கெல்லாம் செய்தி சொல்லியாகிவிட்டது. இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் எல்லாம் வருவார்கள். அவர்களிடத்தில் வெற்று டப்பாவை எப்படிக் காட்டுவது என்ற பதற்றம் அவர்களின் செய்கைகளில் இருந்தது.
அவர்கள் எல்லா இடத்திலும் துழாவினார்கள். ஹீட் சென்சார் , அல்ட்ரா வயலட் என சகலத்தையும் கொண்டுத் தேடினார்கள்.
சத்தம் கேட்டு விழித்தெழுந்த செரீனா - “வாட்ஸ் த ப்ராப்ளம் ப்ரோ - கீப் இட் கொயட்” என்றாள் .
“கொசு மிஸ்ஸிங் ப்ரம் கண்டெய்னர்!!” முருகன் எரிச்சலுடன் சொன்னான்.
“ஓ, ஓகே ப்ரோ”.
அவள் மறுபடி தூங்கச் சென்றாள். அவளுக்கென்ன, ஜென்-சி மங்கை. எருமை மாடு போல இரண்டு சீனியர் விஞ்ஞானிகள் இருக்கையில் அவளை யார் கடிந்து கொள்ளப் போகிறார்கள்?
“பேசாம அது கிடைச்ச இடத்தில் மறுபடித் தேடுவோமா?”. வினுவிடம் பதிலேதும் இல்லை. ஆயிரம் கால அண்டார்டிக் வரலாற்றின் அரியக் கண்டுபிடிப்பை, ஒரே வாரத்தில் இருமுறை செய்திட முடியுமா?
“ஸ்ஸ் .. அங்க பாரு”.
செரீனாவின் போர்வை மேல் உட்கார்ந்திருந்தது அந்தக் கொசு.
கன்டைனரை ஓபன் செய்து , அந்தக் கொசுவை நோக்கி அவர்கள் மெல்ல நகர்ந்தனர்.
அதே நேரம் , செரீனா “ஐஸ் இட் டைம் ஃபார் மை பிரேக் பாஸ்ட் அண்ட் காபி நவ்?” என்று சோம்பல் முறித்து எழுந்தாள்!!
கொசு பறந்தது.
****
“அர்ரே , இஸ் மே , ஹமாரா லோக் நஹி ஹே கியா “என்று பிரதமரின் தலைமைச் செயலாளர் கேட்டார்.
பதிலேதும் இல்லை.
அதிகாரி மறுபடியும் கை நீட்டிப் பேசிய பிறகே , அவர் தன்னைப் பார்த்துத் தான் கேட்கிறார் என்று சிவலிங்கத்திற்குப் புரிந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று பால் வனத்துறை அமைச்சர் பல் இளித்து வைத்தார்.
“க்யா ? ஹை யா நஹி”? என்று அதிகாரி மறுபடி கேட்க, ஹாய் சார் என்று கை குலுக்கச் சென்றார் சிவலிங்கம்.
“அர்ரே” என்று அதிகாரி முகம் கடுகடுக்க, அவரின் பியூன் மந்திரியை வெளியே கூட்டிச் சென்றார்.
“அவர் உங்க கிட்ட, நார்த் இந்தியன் யாரும் அந்த குரூப் ல இல்லையான்னு கேட்டார் சார்”. சிவலிங்கத்திற்கு விஷயம் புரிந்தது. சட்டென்று எழுந்து தொலைபேசியில் பேசினார். “நார்த் இந்தியனுக்கு எல்லாம் வாய்ப்பில்லை, யூ.எஸ் பொண்ணு வேணா இருக்கு. அவர் கிட்ட சொல்லு” என்று பியூனிடம் சொன்னார். டோஸ் வாங்கிய கலை அவர் முகத்தில் பிரகாசித்தது.
“உங்கள நாளைக்கு கூட வரச் சொன்னார்” என்று பியூன் சொல்லிச் சென்றான்.
பிரதமர், அதிகாரி, பால்வனம் என ஒரு பெரும் படை அண்டார்டிகா செல்லும் விமானத்தில் ஏறியது.
ஏர்போர்ஸ் விமானம் ஒன்றும் அதே நேரத்தில் கிளம்பியது.
****
“என்னடா பண்ணப் போறோம் இப்போ? “ கொசுவை விட்டு விட்டதில் முருகன் அழும் நிலைக்கு வந்திருந்தான்.
“ப்ரோ, ஐ காண்ட் பைண்ட் சுகர்” என்றாள் ஹார்வர்ட் மங்கை செரீனா.
“இவ வேற”
“விடு இங்கதான் எங்கயாவது சுத்திக்கிட்டு இருக்கும், பிடிச்சிடுவோம்”. வினு சொல்லி விட்டானே தவிர , அவனுக்கும் கை கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அதை அதிகப்படுத்த, தொலைபேசி ரீங்காரமிட்டது.
வினுவின் முகம் , அந்தக் குளிரிலும் வெளிறியது.
“வாட் ஆர் வி ஹாவிங் பார் டின்னர்” என்ற செரீனாவை அவர்கள் இருவரும் முறைத்தனர்.
“மை ஹெட்” என்றான் வினு கடுப்புடன்.
“ஓஹ் , மீட்! லவ்லி, லெட் மீ பினிஷ் மை யோகா” என்று அவள் கிளம்பிச் சென்றாள்.
“என்ன ஆச்சு?” , “ அவங்க எல்லாம் காலை ஏழு மணிக்கே வந்துவிடுவார்கள், நம்ம கதை ஓவர்!” வினு அழுகையை கட்டுப்படுத்த முயன்றான்.
“பேசாம த்ரீ டி பிரிண்ட் பண்ணிடுவோமா?” என்றான் முருகன்,
அந்த அறையில் இருந்த பிரிண்டர்
உயிர் பெற்றது.
***
“இட்ஸ் எ கிரேட் டிஸ்கவரி பிரேம் அமெரிக்கா” என்று அமெரிக்க அதிபர் , மஞ்சள் முகம் மலர, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
“ ஹமாரா தேஸ் கே, சப்சே படா …” என்று அதையே இந்தியப் பிரதமர் ஹிந்தியில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்.
“இது நம் முதல்வரின் வெற்றி” என்று பால்வனத்தைச் சொல்லச் சொல்லியிருந்தார்கள். ஆனால் அவரோ , புது இடம், புதுக் குளிர் பாராமல், வேட்டியுடன் பாத்ரூமைத் தேடித் கொண்டிருந்தார்.
உள்ளே ஒரு சிறு கன்டைனரில் உயிரில்லா பிளாஸ்டிக் கொசுவும், குற்றுயிரில் வினுவும் முருகனும் அதனருகில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“யா , ஐ வாஸ் பிவோட்டல் இன் திஸ் “ என்று செரீனா, தற்பெருமை பீற்றிக் கொண்டிருந்தாள்.
அதிபரும், பிரதமரும், பால்வனமும் ஒரு சேர உள்ளே நுழைந்தன .
வினு இது தான் என்று அவர்களுக்கு காட்ட, இந்தியப் பிரதமர், கன்டைனரை எடுத்து உத்துப் பார்த்தார்.
“எக்ஸ்க்யூஸ் மீ” என்று பாத்ரூம் விரைந்தான் முருகன்.
கன்டைனர் சகிதமாக, வித வித போஸ் தந்த பிரதமரைப் பார்த்த அதிபர், “ஹி ஐஸ் மில்கிங் இட்” என்று சொல்லிவிட்டு அதை தன்வசப்படுத்தினார்.
புறாக்களை பறக்க விட்டே பழகிய அவர், கன்டைனரைத் திறந்தார். கொசு பறக்கவில்லை. ஒன்றும் புரியாமல் , லேசாக ஆட்டிப் பார்த்தார். பிளாஸ்டிக் கொசு கீழே விழுந்தது.
“வாட்ஸ் ஹேப்பெனிங் ஹியர்” என்றபடி எல்லோரும் அந்த இடத்தில் குவிந்தனர். கூட்டத்தில்
எட்டிப் பார்த்துப் பழக்கப்பட்ட சிவலிங்கம் ஏனோ உள்ளே நுழைந்தார் . நசுக் என்ற சப்தத்துடன் பிளாஸ்டிக்கை மிதித்தார். அந்த இடம் அப்படியே ஸ்தம்பித்து நின்றது.
அதே நேரத்தில் அங்கே பறந்து வந்த கொசு, அமெரிக்க அதிபரின் காதுகளில் ரீங்காரமீட்டு , அமைச்சரின் வேட்டிக்குள் நுழைந்தது. எதையும் யோசிக்காமல் , பட் என்று ஒரு அடி வைத்தார் அமைச்சர்.
புட்டத்தில் கொசுவின் ரத்தக் கறையுடன், அவரை விமானத்தில் ஏற்றினார்கள்!
***
“ஆளும் ஒன்றிய அரசு தமிழருக்குத் துரோகம் விளைவிக்கிறது” என்று சிவலிங்கம், கேமரா முன் கண் சிந்தினார்.
“பிரதமர் நாளை காசியில் நீராடுகிறார், உத்திரப் பிரதேச மக்கள் அவரைச் சந்திக்க ஆர்வம்”!
“அமெரிக்க அதிபர், அண்டார்டிகாவை ஐம்பத்தி மூன்றாவது மாகாணம் ஆக்கப்படும் என்று அறிவித்தார்” என்ற செய்திகள் அவர்கள் திரையில் ஓடின.
வினுவும், முருகனும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று குல தெய்வங்களை வேண்டிக் கொண்டனர்.
“ப்ரோ, வேர் ஐஸ் மை காபி மக்” என்றாள் செரீனா
****
அவர்கள் முதன் முதலில் கொசுவைப் கண்டுபிடித்த இடத்தில், அது இட்ட முட்டைகள் ஒவ்வொன்றும் கொசுவாக உருவெடுத்துக் கொண்டிருந்தன.