நதியென நாம் நடப்போம்

 பாடல்களுக்கு ஒரு விசேடத் தன்மை உண்டு. 


சில பாடல்கள் நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்துடன் பின்னிப் பிணைத்து இருக்கும் . 

உதாரணமாக எனக்கு - “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” பாடல். இது  என்னை பத்தாம் வகுப்பு எக்ஸ்கர்ஷனுக்கு அழைத்துச் சென்று , நான் பயணித்த  பஸ்ஸின் கடைசி வரிசை ஜன்னல் சீட்டில் அமர்த்தி விடும். 


இவை ஒரு ரகம். 


சில பாடல்கள் மயிலிறகால் நம் கன்னங்களைச் சீண்டி , மயிர் சிலிர்க்க வைக்கும். 


வெகு சில பாடல்கள் மட்டுமே நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். பனிப் பிரதேசத்தில் , எலும்பினுள் ஊடுருவும் குளிர் காற்றைப் போல. இவற்றில் சில சிறந்த பாடல்கள் அதி திராபையான படங்களில் வந்து சோதிக்கும். பாடல்களுக்காவே சில படங்களுக்குச் சென்று தலைவலி வாங்கி வந்த அனுபவங்கள் நிரம்ப உள்ளன (சர்க்கரைக் கட்டி - டாக்சி டாக்சி பாடல் ஒரு உதாரணம்.  மஹா மொக்கையான படம் , அந்தப் பாடலைப் பார்க்க  இரண்டு மணி நேர ரம்பத்தைத் தாங்கிக் கொண்டோம்) 


இதில் ஒரு பாடல்,  ஒரு வாரமாக மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது .  "சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது" காதல் வைரஸ் படத்தில் வரும் . இது ஏன் மனதை விட்டு விலகாமல் இருக்கிறது? ஒரு பாடல் நமக்குப் பிடித்திட என்னென்ன காரணங்கள் உண்டு? 


பல காரணங்கள் உண்டு ! எனக்குத் தெரிந்த வகையில் , இவையாக இருக்கலாம் - 


  • ராகம் , தாளம், பல்லவி, சரணம் எல்லாம் நன்றாக அமைந்த காரணத்தால்  இருக்கலாம் (கண்கள் இரண்டால்)
  • பாடியவர்களின் மயங்க வைக்கும் குரலாகவோ - கன்னித் தமிழ்(தமிழைக் கொலையே செய்தாலும்) கொண்டவரின் குரலாக இருக்கலாம் (சாதனா சர்கம்- உதித் நாராயண் )
  • பிரத்யேகமாக உபயோகிக்கப்பட்ட சில இசைக் கருவிகளாக இருக்கலாம்(சின்னச் சின்ன ஆசையின் ஆரம்ப ஜிங்கிள் ஒரு உதாரணம்) 
  • கால்களை தாளம் போட வைக்கும் ஒற்றைப் படை பீட்ஸ் ஆக  இருக்கலாம் ( பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா ) 
  • தோண்டத் தோண்ட கிடக்கும் புதையலாக இருக்கும் அதன் வரிகள் கூட காரணமாக இருக்கலாம். 

இதில் கடைசி பாயிண்டுக்கு  பல உதாரணங்கள் இருக்கின்றன . இவற்றில் ஒன்று வாலி எழுதிய “சொன்னாலும் கேட்பதில்லை” பாடல் . 


அதிலும் 


“நதியென நான் நடந்தேன்  

அணை தடுத்தும் கடந்தேன் 

கடைசியில் கலந்தேன் கடலே!”


 (இதிலும்,  இந்த அக்கா பாடுவதை கேட்டுப் பாருங்கள்) --> Song link


பாடலின் வரிகளுக்கு வருவோம் .. 


மேலோட்டமாக இதன் வரிகள்  , ஒரு பெண் ஆணிடம் சேர , பல பிரச்சினைகளைத் தாண்டிச் செல்கிறாள் என்பதைச் சொல்கிறது.


இதையே பகுப்பாய்வு?! செய்ததில் சில உள் அர்த்தங்கள் புரிகின்றான். 


ஒரு நதியின் தேடல் என்ன? எங்கோ ஓர் இடத்தில் பிறந்து, பல இடங்களைக் கடந்து கடலில் கலப்பதுதானே . நதி கடலைத் தொட்ட பின்னரே முழுமை அடைகிறது! 


மனிதர்கள் நதியை வைத்துப் பெறும் பயன்களைப் பற்றி எந்தக் கவலையும் அதற்குக் கிடையாது. நான் என் போக்கில் செல்கிறேன், உனக்கு வேண்டுமானால் என்னைப் பயன்படுத்திக்கொள் என் தன் போக்கில் செல்கிறது. ஒரு நதியால் தோற்றுவிக்கப்படும் விவசாயமோ, நாகரீகமோ , அதனுள் நடக்கும் சண்டைகளையோ, எதையுமே அது பொருட்படுத்துவது இல்லை. மூலம் ஒரு சிறு ஊற்று , முடிவு கடலில். 


நதியைப்  போல தான் மனிதர்களும். ஆரம்பம் நம் கையில் இல்லை. முடிவு - எல்லோருக்கும் ஒரே முடிவு. இடையில் தான் எத்தனை வளைவுகள் , பிரச்சினைகள்? நம்மால் ஏன் ஒரு நதியைப் போல பயணிக்க முடியவில்லை? 


நதியென நாம் நடப்போம் , அணை தடுத்தும் கடப்போம் , கடைசியில்….