நீண்ட நாள்களுக்குப் பிறகு சார்லட் ரயிலில் பயணம்.
ஒரு வாரமாக அனைத்து செய்தி நிலையங்களும் “சார்லட்டில் வரலாறு காணாத பனிப் பொழிவு” என்றன . இது எனக்குத் தெரிந்த வரையில் - மூன்றாவது “வரலாறு காணாத” நிகழ்வு.
ஒரு அடி உயரம் வரை பனிப் பொழிவு இருந்தது. பனி பொழியும் போது இருந்த குதூகலம் அடுத்த நாள் இல்லை. வெயில் படாத இடங்களில் பனி உருகாமல் கட்டியாகி இருந்தது . அது உருகிய இடங்களில் வழுவழுப்பாக பிளாக் ஐசாக மாறியிருந்தது. அதன் மேல் கால் வைத்தால் வழுக்கிக் கொண்டே ஆஸ்பத்திரியில் போய் படுத்துவிடலாம்.
இந்த ஒரு காரணத்திற்காகத்தான் ரயில் பயணம்.
எப்போதும் இருக்கும் கூட்டம் இல்லை. கூட்டம் இல்லாததால், எப்போதும் நசுக்கும் அந்த ஆறரை அடி ஆஜானுபாகுவான பெண்ணும் , ஒழுகில்லாமல் அலைந்தோடி முகத்தில் அறையும் கூந்தல் வகையறாக்களும் இல்லை .
ரயில் படியோரம் தண்ணீர் ஒழுகி நின்றது. மூத்திரமகாக் கூட இருக்கக்கூடும். கூட்டம் தான் இல்லையே தவிர , என்றும் இருக்கும் அழுக்குப்பை கருப்பர் இருந்தார். மூவர் உட்காரும் இடத்தில் எப்போதும் போல அனந்த சயனத்தில் இருந்தார்.
ஏதோ ஒரு ரயில் நிலையத்தின் கடைச் சுவற்றில் இருந்த அந்த பிகினி அணிந்த பெண்ணின் அரை புகைப்படத்தை, சொல்லிவைத்தார் போல அத்தனை ஆண்களும் பார்த்தோம்.
அவளைக் கடந்ததும் , ஜன்னல் வழியே மரத்தடியில் உருகக் காத்திருக்கும் பனிக் கட்டிகள் கண்ணில் பட்டன. எங்கிருந்தோ ஆவியாக மாறி, பல சுழற்சியைக் கடந்து, பைன் மரத்தின் அடியில் பஞ்சு போல தஞ்சம் அடைந்திருக்கின்றன.
நூற்றி இருபது வருடம் வரை வாழும் பைன் மரங்கள் நிர்மிந்து நிற்கின்றன. குச்சிக் கிளைககால் அவை ஒன்றோடு ஒன்று கைகோர்த்து கவலையின்றி நிற்கின்றன.
அதன் ஆயுளில் பாதி கூட வாழுவோமா என்று தெரியாத மனிதக் கூட்டம் தான் கவலையும், பயமும், வேதனையும் நிறைந்து ரயில் முழுக்க தலை குனிந்தபடி நிற்கின்றன .